திருமுருகாற்றுப்படை அறிமுகம்:-
இது முருகனிடத்தே ஞானம் பெற்று நன்னெறியடைய விரும்புவோரை வழிப்படுத்தற் பொருட்டு நக்கீரனால் பாடப்பெற்றது. 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் ஆனது. முருகு, புலவராற்றுப்படை என வேறு பெயர்களும் இந்நூலுக்கு உள்ளன. இது பதினோராம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளது.
முருகப்பெருமான் உறையும் திருத்தலங்களான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியவற்றைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. மேலும், முருகனின் திருவுருவச் சிறப்பு, முருகனின் ஆறு திருமுகங்கள், பன்னிரு கைகளின் செயல்கள், சூரனுடன் செய்த போர்ச்சிறப்பு, சூரர மகளிர் செயல்கள், முருகன் எழுந்தருளியுள்ள நீர்த்துறைகள், வழிபடும் முறை, அருள்பெறும் முறை, அடியார் இயல்புகள், அருள்புரியும் விதம் ஆகியன இதன் பொருண்மைகளாக அமைகின்றன.