சிறுபாணாற்றுப்படை அறிமுகம்:-
சிறுபாணாற்றுப்படை 269 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. பரிசில் பெறக் கருதிய யாழ் இசைத்துப் பாடுவதில் வல்ல பாணன் ஒருவனைப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சிறிய யாழைக் கொண்டு பாடும் பாணரை ஆற்றுப்படுத்தியமையால் சிறுபாணாற்றுப்படை என்று பெயர்பெற்றது.
விறலி வருணனை, மூவேந்தர் தலைநகரச் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம், சிறுபாணரின் வறுமை, நெய்தல், முல்லை, மருத நிலத்தாரின் பண்புகள், மாவிலங்கை, எயில்பட்டினம் ஆகிய நகரங்களின் இயல்பு, நல்லியக்கோடன் புலவரை உபசரித்துப் பரிசுதரும் பாங்கு ஆகிய செய்திகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.