திருக்குறள் அறிமுகம்:-
அற நூல்களில் உலகப் புகழ்பெற்ற ஒப்பற்ற உயரிய நூலாகத் திகழ்வது திருக்குறள். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் 133 அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் பத்துக் குறட்பாக்களாக 1330 குறட்பாக்களையும் கொண்டது.
அறத்துப்பாலில் திருவள்ளுவரின் அன்புள்ளத்தையும் துறவுள்ளத்தையும், பொருட்பாலில் அவரின் அரசியல், பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த அறிவையும், காமத்துப்பாலில் அவரின் கற்பனையுள்ளத்தையும் வருணனைத் திறத்தையும் நாடகப் போக்கையும் காணலாம்.
பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார் முதலானோர் இந்நூலுக்கு உரையெழுதியுள்ளனர். இன்றும் இந்நூலுக்கு அறிஞர் பெருமக்கள் பலர் புத்துரை எழுதி அணி சேர்க்கின்றனர்.
ஓதற்கு எளிதாகவும் உணர்தற்கு அரிதாகவும் உலகப் பொதுமறையாகவும் விளங்கும் திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.