ஐங்குறுநூறு அறிமுகம்:-
இந்நூல் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் உடைய ஆசிரியப்பாவாலாகிய பாடல்களை உடையது. மற்றத் தொகை நூல்களின் பாக்களைக் காட்டிலும் அடிவரையறையில் குறைந்த நூறு நூறு பாக்களால் ஐந்திணை ஒழுக்கங்களைச் சிறப்பித்துக் கூறுவதால் ஐங்குறுநூறு எனும் பெயர் பெற்றது. ஒவ்வொரு திணையிலும் பத்துப் பாடல்களைக் கொண்ட பத்துத் துறைகள் உள்ளன. கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 501 பாடல்கள் இதில் உள்ளன.
மருதத்திணையை ஓரம்போகியாரும் நெய்தல்திணையை அம்மூவனாரும் குறிஞ்சித்திணையைக் கபிலரும் பாலைத்திணையை ஓதலாந்தையாரும் முல்லைத்திணையைப் பேயனாரும் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. உ.வே.சாமிநாதையர் அவர்கள் 1903இல் இந்நூலைப் பழைய உரையுடன் முதன்முதலில் பதிப்பித்துள்ளார்.