பதிற்றுப்பத்து அறிமுகம்:-
சேர அரசர்கள் பதின்மர் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களே பதிற்றுப்பத்து ஆகும். இந்நூலின் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. இந்நூல் ஆசிரியப்பாவாலான புறப்பொருள் நூல் ஆகும். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு ஆகியவற்றைப் புலப்படுத்தும் குறிப்புகள் உள்ளன.
ஒவ்வொரு பாட்டிலும் பொருளால் சிறப்புடைய தொடர் ஒன்று அந்தப் பாட்டின் பெயராய்க் காணப்படுகின்றது. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் கல்வெட்டின் மெய்க்கீர்த்தி போன்று பதிகம் உள்ளது. அதில் பாடப்பெற்ற அரசன், பாடிய புலவர், அப்பத்துப் பாடல்களின் தலைப்புகள், பாடிய புலவர் பெற்ற பரிசில், அவ்வரசன் ஆண்ட காலம் போன்ற செய்திகள் உள்ளன.
இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது. மூன்றாம் பத்து பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியது. நான்காம் பத்து களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. ஐந்தாம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது. ஆறாம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் பாடியது. ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. எட்டாம் பத்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடியது. ஒன்பதாம் பத்து இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார் பாடியது. பழைய உரை ஒன்றும் இந்நூலுக்கு உள்ளது.
சேர அரசர்களைப் பற்றியும் அக்காலப் போர்முறை, மக்களின் வாழ்க்கை முதலானவற்றைப் பற்றியும் கூறும் வரலாற்று, பண்பாட்டு இலக்கிய ஆவணமாக இதனைக் கொள்ளலாம்.